அப்ப புரியல, ஆனா இப்ப புரியுது – பதிலடி கொடுத்த பார்த்தீபன்

தன்னை பைத்தியம் என்று கலாய்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு இயக்குனர் பார்த்திபன் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பார்த்திபன் கூறியதாவது:

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ படத்தில் ’நன்றாக பேசிக் கொண்டிருந்த நீ ஏன் பார்த்திபன் மாதிரி பேசுகிறாய்’ என்ற ஒரு வசனம் வரும். இந்த வசனத்தை முதலில் நானும் எல்லாரையும் போல கேட்டு சிரித்தேன். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது, என்னை அந்த படத்தின் இயக்குனர் கலாய்த்து இருக்கிறார் என்று. அதாவது நன்றாக இருக்கும் நீ ஏன் பைத்தியம் போல் பேசுகிறாய் என்பதுதான் அந்த வசனத்திற்கு அர்த்தம் என்பது எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது.

Love Today, Pradeep Ranganathan, Parthipan, 17th Mar 2023

என்னை இந்த அளவுக்கு விமர்சனம் செய்ததற்கு பின்னணியில் ஒரு கதை உள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’கோமாளி’ கதை என்னுடைய உதவியாளர் ஒருவரின் கதையை போல் இருந்தது என்று எழுத்தாளர் சங்கத்தில் பிரச்சனை வந்தது. கே பாக்யராஜ் அவர்கள் என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். மேலும் அவர் பத்து லட்ச ரூபாயும் பெற்று தந்தார். என்னுடைய உதவியாளருக்கு நான் ஆதரவாக இருந்ததால் ஒருவேளை பிரதீப் ரங்கநாதனுக்கு என் மீது கோபம் இருந்திருக்கும், அதனால் ஒரு சிறிய பழிவாங்கலாக இது இருக்கலாம் என்று நான் நினைத்தேன்’ என்று கூறினார்.

ஆனால் இன்னும் சில நாட்கள் கழித்து அவர் மெச்சூரிட்டி ஆனவுடன் இதை செய்தது தவறு என்று அவரே புரிந்து கொள்வார் என்று கூறினார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் அபாரமான வளர்ச்சியை பார்த்து நான் மிகவும் ரசிக்கிறேன், அவருடைய ‘லவ் டுடே’ படத்தை நான் பல மேடைகளில் பாராட்டி இருக்கிறேன், இப்போதும் அவர் இன்னும் உயர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்து, இது என்னுடைய மெச்சூரிட்டி என்றும் இதே மெச்சூரிட்டி அவருக்கும் ஒரு நாள் வரும்’ என்று கூறினார். இவரது இந்த பேட்டி தற்போது வைரலாகிறது.