தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த தளபதி 67 படக்குழு!

சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார்.

தளபதி 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது தளபதி 67 படக்குழு. அதில் நடிகைகள் திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது. இதன்மூலம் அவர்கள் இருவரும் அப்படத்தில் இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது.

நாளை முதல் காஷ்மீரில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். அங்கு விஜய், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளும், விஜய் – திரிஷா இடையேயான காதல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

The film crew of Thalapathy 67 flew to Kashmir in a private plane!