லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர முன்னரே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்ட இயக்குனர் ஒருவர் தற்போது விலகி கொண்டதாக செய்தி வெளிவந்துள்ளது.

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத், விஷால், கௌதம் மேனன், மிஷ்கின், நிவின் பாலி, பிரித்விராஜ் உள்பட ஒரு சில பிரபலங்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் விலகிவிட்ட நிலையில் அதற்கான காரணமாக மிஷ்கின் இயக்கிய ’பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தநிலையில் மிஷ்கின் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து விட்டதால் உடனே இந்த படத்தை ஆரம்பிக்கலாம் என கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து விஜயின் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ள மிஷ்கின், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தின் திரைக்கதையை தயார் செய்யும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.