மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல நடிகர் ஒருவர் திடீரென சென்றது அந்த படக்குழுவினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து ’காதல் – தி கோர்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படத்தை இயக்கிய ஜோபேபி இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த படக்குழுவினர் அவரை வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான தினத்தில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கதையை கேட்ட நாளிலிருந்து எனக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
’சீதா கல்யாணம்’ என்ற மலையாள படத்தில் நடிகை ஜோதிகா கடந்த 2009 ஆம் ஆண்டு நடித்திருந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.