தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ திரைப்படம் தேசிய விருது பெற்றது மட்டுமன்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பபை பெற்றது.

இந்த நிலையில் காமெடியன் மற்றும் ஹீரோவாக நடித்த யோகிபாபு தற்போது ரமேஷ் சுப்பிரமணியம் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை லெமன்லீஃப் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பூஜை நேற்று முருகன் கோவிலில் நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.