வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படத்தின் முதல் பாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்பது தெரிந்த விடயம்.

சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடித்த இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதோடு இந்த படத்தின் முதல்பாக படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு சில நாட்களில் அதுவும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
வெற்றிமாறனின் ’அசுரன்’ படத்திற்கு பின்னர் வெளியாகும் திரைப்படம் விடுதலை என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ராஜீவ்மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.