விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு கடிதம் எழுதிய பெண் எம்பி!

விஜய் சேதுபதி நடித்து சீனு ராமசாமி இயக்கி சமீபத்தில் வெளியான படம் “மாமனிதன்”. காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தனர்.

‘மாமனிதன்’ திரைப்படத்தை பார்த்த திமுக பெண் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இயக்குனருக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: “அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வை கதைக்களம். வழமையான சீனுராமசாமியின் படங்கள் போலவே யதார்த்த பாணி கதை சொல்லல் தான். என்ன பெரிதாக அல்லது புதிதாக இதில் என சற்று வித்தியாசமாக நம்மை சாய்ந்து உட்கார வைக்கும் நிகழ்வுகளுடன் தான் இந்த படம் தொடங்குகிறது. ஆனால் அதில் சமகாலத்திய வாழ்வில் தனக்கான ஒரு எளிய அறமுடன் வாழத்துடிக்கும், வாழ்ந்து முடிக்கும் ஒரு மனிதனின் கதையாக அது விரியும்போது ஈர்ப்பின் விம்மலுடன் சற்று நிமிர்கிறோம்.

Vijay Sethupathi, Maamanithan, Seenu Ramasamy, 27th of August 2022

சின்னஞ்சிறு கூட்டில் பேராசை இன்றி வாழ்வை நகர்த்தும் ஒரு குடும்பத்தலைவனின் அகலக்கால் முயற்சி அதளபாதாளமாவது அல்லது ஒட்டுமொத்த குடும்ப தற்கொலைகளில் முடிவதும் நமக்கு அசாதாரண செய்தி அல்ல. அப் புதையலை தனக்கு தெரிந்த அறமொன்றின் துடுப்பை பற்றியவாறு அம்மனிதன் கடந்து மாமனிதன் ஆகும்போது வாழ்வின் மீதான நம்பிக்கையில் இருக்கையின் கைப்பிடியை பற்றியபடி எழும்புகிறோம்.

மேலும் பிழைகளில் இடறிவிழுதல் இயல்பே. அவை தவறுகளா என தீர்மானிக்கும் தன்மை அவசியம் எனவும் ஊழ்வினை அல்ல உன் மனமே வந்து உறுத்துமென கடைசியில் கங்கைக்கரையில் முடிகிறது கதை.
வசனங்கள் தான் சீனுவின் பலம். விஜய் சேதுபதிக்கு அயிரை மீன்களை பாலில் எளிதாக கழுவுவது போல கதை நாயகன் வேலை. மகனது அநியாய செயலுக்கு தன் கழுத்துச் சங்கிலியை கழட்டி தந்தபடி உணவு பரிமாறும் அம்மாவின் கைகளில் நடுக்கமே சீனு ராமசாமியின் கதையியின் ஆன்மாவை நமக்கு கருத்துமிடம்.

வாழ்த்துக்கள் அன்பு சீனு. வணிக சமரசமற்று வாழ்வின் கீற்றுகளை தான் நம்பும் அறத்தின் வழியில் படைத்தமைக்கு’ என்ற பதிவு இணையத்தில் பரவி வருகிற்து.