தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்….

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த ‘வாரிசு’ படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் பின்னர் சென்னையில் மீண்டும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் இந்த ஆண்டு இறுதியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Varisu, Vijay , 14th of August 2022