கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான திரைப்படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த திரைப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலை காட்சிகள் திரையில் இடம்பெறும்போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
