மீண்டும் புத்துயிர் பெறும் கமல் படம்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் செய்தி வெளியான நிலையில் அனேகமாக இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடித்து இயக்கும் இன்னொரு படமான ‘சபாஷ் நாயுடு’ திரைப்படமும் 6 வருடங்களிற்கு பின்பு தற்போது புத்துயிர் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெய கிருஷ்ணா ஆகியோர் தங்களது தனிப்பட்ட காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகினார்கள். அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இந்த படத்தை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீரென கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சமீபத்தில் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் ‘சபாஷ் நாயுடு’ படத்தை மீண்டும் தொடங்கும் எண்ணம் இருப்பதாகவும் அந்த படத்தின் அறிவுசார் சொத்துரிமை தன்னிடம் தான் உள்ளதாகவும் தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கமல் ரசிகர்கள் உற்ச்சாகத்தில் உள்ளனர்.