கமல் – மம்முட்டி இணையும் படம் குறித்து தகவல்!
கமல் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிக்காக கமல்ஹாசன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருவது மட்டுமின்றி ஒருசில வெளிநாடுகளுக்கும் சென்று அவர் புரமோஷன் செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து ‘விக்ரம்’ படத்தை புரமோஷன் செய்திருந்தார். அதேவேளை கேரளாவில் நடந்த மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசிய போது ‘நானும் மம்முட்டியும் இணைந்து நடிக்க பல கதைகளை ஆலோசித்தோம், ஆனால் கதை சரியாக அமையவில்லை. எனக்கு ஓரளவுக்கு திருப்தி என்றாலும் மம்முட்டிக்கு திருப்தியாக இல்லாமையினால் கொஞ்சம் பொறுங்கள், நல்ல கதையாக அமையட்டும், நாம் அனைவரும் சேர்ந்து நடிப்போம் என்று கூறினார்.
தற்போது ‘விக்ரம்’ படம் வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தை பார்த்தபின் மம்முட்டி நிச்சயம் என்னுடன் இணைந்து நடிக்க சம்மதிப்பார் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்துள்ள நிலையில் மம்முட்டியுடனும் விரைவில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.