டி. ராஜேந்தர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்த தகவல்
T. Rajendar, Simbu, Tamil Cinema 24-May-2022 – பிரபல இயக்குனரும் நடிகர் சிம்புவின் தந்தையுமான டி. ராஜேந்தர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி. ராஜேந்தர் அவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அவரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியே தெரியாத நிலையில் தற்போது அவர் போரூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது.
டி. ராஜேந்தர் அவர்களுக்கு 67 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேல்சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு கூட தனது தந்தையின் உடல்நிலை குறைவு குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.