ஐபிஎல் இறுதி போட்டியில் ரிலீஸாக இருக்கும் பிரபல நடிகரின் பட டிரைலர்!
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிரபல பாலிவுட் நடிகர் நடித்த படத்தின் டிரைலர் கிரிக்கெட் மைதானத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. இதனை அடுத்து மே 29 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தின் ட்ரெய்லரை இறுதிப் போட்டியின் இடையே இடைவேளையின்போது வெளியிட அமீர்கான் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அமீர்கான் ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் திரைப்படமான Forest Gump என்ற படத்தின் ரீமேக் படமான ‘லால் சிங் சத்தா’ படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கான் கஷ்டப்பட்டு உழைத்து உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் படங்கள் உருவாகாத நிலையில் இந்த படம் அந்த குறையை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரீனா கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.