பார்த்திபன் செயலால் இசைப்புயல் அதிர்ச்சி

இரவின் நிழல் டீசர் வெளியீட்டில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்

Iravin Nizhal, R.Parthiban, A.R.Rahman 2nd May 2022 : தாவணிக் கனவுகள் படத்தில் துணை நடிகராக நடித்த பார்த்திபன் புதிய பாதை படத்தின் மூலம் 1989ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். பின்பு உள்ளே வெளியே, பொண்டாட்டி தேவை, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம்,இவன், குடைக்குள் மழை, என பல படங்களை இவர் இயக்கியிருந்தார்.

இவருடைய ஐம்பதாவது படமான வித்தகன் படமும் இவர் இயக்கியதே. இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தார். சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்காக இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் முதன் முறையாக பார்த்திபனுடன் இணைந்துள்ளார்.

இத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பார்த்திபனும் ஏ.ஆர்.ரகுமானும் பங்கு பற்றிய உரையாடல் நிகழ்வு நடந்தது. அப்போது பார்த்திபனின் மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமான பார்த்திபன் தனது மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்போது மேடையில் உடனிருந்த ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன் இச்செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

எனினும் நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய பார்த்திபன் அச் சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ஏ.ஆர்.ரகுமான் முன் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.