இயக்குனர் தமிழ் டாணாக்காரன் படத்தின் அனுபவம் பற்றி கூறுவது
Vikram Prabhu, Taanakkaran, Tamizh, Vetrimaaran 14-Apr-2022
பொதுவாக மக்கள் மத்தியில் போலீஸ்காரர்கள் என்றாலே கரடுமுரடானவர்கள், கடுமையானவர்கள் என்ற எண்ணம் உண்டு. ரவுடிகளைக் கொல்லும் போலீஸ் படங்களையும், போலீஸ் ரவுடியாகவும் கொண்ட கதைகளையும், அண்டர்கவர் ஆபரேஷன் செய்யும் போலீஸின் கதைகளையும் அதிகம் பார்த்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு காவலர்களின் வாழ்க்கை குறித்த வித்தியாசமான ஒரு பரிமாணத்தை முன்வைத்துள்ளது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘டாணாக்காரன்’ திரைப்படம்.

சினிமா மீதுள்ள அதீத காதலால் காவல்துறை பணியிலிருந்து விலகி உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய தமிழ், தனது முதல் படைப்பிலேயே காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் அரசியலை பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.
அசுரன், ஜெய்பீம் படங்களின் மூலம் நடிகராக நன்கு அறியப்பட்டவர் தமிழ். இவர் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற முயற்சியின் மூலம் தன்னலமற்ற உழைப்பை சமூகத்திற்காக வழங்கிய காவலர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டும் பெருமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
காவலர்கள் தங்கள் பணிக்காலத்தில் எதிர் கொண்ட சவால்கள், தியாகங்கள், விளைவுகள், அவர்களின் குடும்ப மற்றும் பணி வாழ்க்கையின் சமநிலை போன்ற பல விஷயங்களை இம்முயற்சி மூலம் வெளிக்காட்டி இருக்கின்றனர் படக்குழுவினர்.

மேலும் 35 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காத போலீஸ்காரர், வேலை காரணமாகத் தனது குழந்தைகளின் மழலை பருவத்தை அனுபவிக்க முடியாத போலீஸ்காரர் எனப் பல நிஜக்கதைகளை இந்த ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ முயற்சி வெளிகொண்டுவந்துள்ளது.
இந்த படத்தின் அனுபவம் பற்றி இயக்குனர் தமிழ் கூறுகையில் “நான் முதன்முதலாக வெற்றிமாறன் சார் கூட ‘விசாரணை’ படத்தில் தான் சேர்ந்து பணியாற்றினேன். அதன்பின் வடசென்னை, அசுரன் என்ற போக்கில் போய்ட்டு இருந்தது. அப்போ என்னோட வேலைகளெல்லாம் நல்லாருக்குன்னு வெற்றிமாறன் பாராட்டுவார். அசுரன் பண்ணிட்டு இருக்கும்போதே டாணாக்காரன் கதை பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ஜெய்பீம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னோட முதல் மேடை, முதல் புகழ், முதல் வெற்றி எல்லாமே ஒரு இயக்குநராகத்தான் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால், அசுரன் மற்றும் ஜெய்பீம் மூலமா ஒரு நடிகராக எனக்கு இதெல்லாம் கிடைச்சுது. ஆனால், ஓர் இயக்குநராக கிடைத்த இந்த அங்கீகாரம்தான் எனக்கு பெரிய கொண்டாட்டம்”.
மற்றும் வெற்றிமாறனிடம் பணியாற்றிய அனுபவம் இப்பட உருவாக்கத்திற்கு எவ்வளவு உதவி அளித்தது பற்றி கூறுகையில் “ஒரு அழுத்தமான கதையை கமர்ஷியலா எப்படி கொடுக்கலாம்னு வெற்றிமாறன் யோசிப்பார். அதுதான் அவரோட சக்ஸஸ்க்கு காரணம். அதேமாதிரி தான் டாணாக்காரன் ஒரு அழுத்தமான கதைக்களமாக இருந்தாலும், அதை எப்படி கமர்ஷியலா கொடுக்கலாம்னு நான் யோசிச்சேன். ரொம்ப சிக்கலான சீன்கள் எடுக்கும்போதெல்லாம் அவரைத்தான் யோசிச்சு பார்ப்பேன். இந்த சீனை அவர் எப்படி எடுப்பாருன்னு யோசிப்பேன். அவர் நிறைய இடங்களில் சிங்கிள் ஷாட்ஸ் யூஸ் பண்ணுவார். நானும் அதே மாதிரி முக்கியமான இடங்களில் சிங்கிள் ஷாட்ஸ் யூஸ் பண்ணேன். எங்க அக்கா படம் பாத்துட்டு வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுது ‘படத்துல வெற்றிமாறனை உரிச்சு வச்சிருக்காய்யா’ன்னு சொன்னாங்க. அந்த வார்த்தையைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என கூறியிருந்தார்.
மேலும் இயக்குனர் தமிழ் கூறுகையில் இக்கதையில் போலீஸ் காரர்கள் கஷ்டத்தை நான் படமாக எடுக்கவில்லை, போலீஸ்காரங்க எப்படி உருவாக்கப்படுறாங்க அப்படிங்கிறதைதான் எடுத்திருக்கேன். நாம காவல்துறை மேல வைக்கும் விமர்சனங்களுக்குப் பின்னால் என்ன மாதிரியான காரணங்கள் இருக்குன்னு ஆராயணும் இல்லையா..? காரணத்தைக் கண்டுபிடித்தால் தானே பிரச்சனையைத் தீர்க்க முடியும். அதுக்கான விவாதத்தை இந்தப் படம் ஏற்படுத்தும் என்று நினைத்தேன் என கூறியிருந்தார்.