ரஜினி-169 படத்தின் தலைப்பு
Rajinikanth, Aishwarya Rai, Nelson Dilipkumar, vadivelu, Anirudh Ravichander, Thalaivar 169 29-Mar-2022
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமான தலைவர் 169 இல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவருக்கு 169 வது படமாக அமைகிறது. நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். ரஜினி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும், நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு வடிவேலுவிடமும் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினியின் 169 வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், ஆகவே எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் ‘பாஸ்’ என்ற பெயரும் இருக்கிறது என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.