சம்பள பாக்கி கொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் மீது வழக்கு
Sivakarthikeyan, Gnanavel Raja 29-Mar-2022
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு பிறகு தற்போது ‘அயலான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது முழு வீச்சில் இப்படத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள ‘டான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். அப்படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபா சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.