மாமனிதன் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர் கே சுரேஷ்! விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

மாமனிதன் படம் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு!

Vijay Sethupathi, Gayathri, Anikha Surendran, Seenu Ramasamy, R. K. Suresh, Maamanithan 17-Mar-2022

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக வலம் வருவதற்கு முன்பு முன்னணி ஹீரோக்களின் படத்தில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின் தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கிய சீனுராமசாமியை தன்னுடைய ஆஸ்தான இயக்குனராகவே நினைத்துத் தொடர்ந்து அவரோடு படங்களில் பணியாற்றி வருகிறார்.

ஆர். கே. சுரேஷ் – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பீட்சா மற்றும் சூதுகவ்வும் ஆகிய படங்களுக்குப் பிறகு முன்னணிக் கதாநாயகனான பிறகு மீண்டும் சீனுராமசாமியோடு இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார்.

இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து இவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் விஜய் சேதுபதியோடு, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படும் ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார்.

விஜய் சேதுபதி – சீனு ராமசாமி

தர்மதுரை வெற்றிக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமனிதன். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதல் முறையாக இசையமைத்துள்ளனர். படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது YSR FILMS PVT LTD இன் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை தர்மதுரை தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி’ என்க் கூறியுள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் மே 2022 என்றும் அறிவித்துள்ளார். இந்த டீவிட்டைப் பகிர்ந்துள்ள யுவன் ‘உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.