சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரை விமர்சனம்

Etharkkum Thunindhavan Movie Review

Etharkkum Thunindhavan, Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Sathyaraj, Pandiraj, D.Imman 10th Mar 2022

தென்னாட்டில் சத்யராஜ், சரண்யாவின் மகன் சூர்யா வக்கீலாக இருந்து வருகின்றார். வடநாட்டில் நன்கு செல்வாக்கு கொண்டவராக வினய் இருக்கிறார். இவ்விரு ஊர்களுக்குமிடையே சில காலமாக பகை இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் ஊரிலுள்ள பெண்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சிலர் கொலையும் செய்யப்படுகிறார்கள். ஹீரோ சூர்யா இவற்றை கண்டறிய முற்படுகிறார். ஒரு கட்டத்தில் வினய் தான் இதற்கு காரணம் என கண்டறிகிறார். ஏன் வினய் பெண்களை கொலை செய்கிறார்? சூர்யா வினய்க்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லை சூர்யாவே தண்டித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஹீரோ சூர்யா சண்டை காட்சிகள், சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என எதிலும் குறை வைக்காமல் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் காட்சிகளாகவே அமைந்துள்ளன. சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் வழமை போலவே அசத்துகிறார்கள். ஹீரோயின் பிரியங்கா மோகன் வெகுளியாக வெகுவாகவே ரசிகர்களை கவர்கிறார். நடிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். மொடேன் வில்லனாக தூள் கிளப்புகிறார் வினய். இவரது அமைதியான நடிப்பு படத்திற்கு பிளஸ். தேவதர்ஷனி, சூரி, புகழ் ஆகியோர் குறையில்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

Etharkkum Thunindhavan Movie Review

தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு முக்கியமான சம்பவம் குறித்த விவகாரத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இப்படத்தை சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இமான் இசையில் வழமை போன்று பாடல்கள் அனைத்தும் கேட்கக்கூடியவையே. இவரது பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவின் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. மொத்தத்தில் இது சூர்யாவின் இன்னுமொரு வெற்றிப்படம்.