சிம்பு வழக்கு ஒத்திவைப்பு.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்றத்தால் அபராதம்!

சிம்புவின் வழக்கில் ஏற்பட்ட தாமதம்!

Silambarasan, simbu, Vishal, Bigg Boss Ultimate, Pathu Thala, Corona Kumar, Vendhu Thanindhathu Kaadu 09-Mar-2022

நடிகர் சிம்பு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான படம் “அன்பானவன்-அடங்காதவன்-அசராதவன்”. இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 49 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, அவரிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த தொகையை வரும் 31-ந் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.