இசை புயலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய இளையராஜா!
A. R. Rahman, Ilaiyaraaja, Maamannan, Fahadh Faasil, Udhayanidhi Stalin, Keerthy Suresh, Mari Selvaraj 07-Mar-2022
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் விருப்பத்திற்கு இளையராஜா தற்போது தெரிவித்துள்ள பதில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் ‘Dubai Expo 2020’ நிகழ்ச்சியில் ‘இசைஞானி’ இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு மிகவும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இசை பிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, துபாயிலுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ஸ்டூடியோவிற்கு விசிட் செய்துள்ளார் இளையராஜா. அங்கு அவரை வரவேற்ற ஏ. ஆர். ரஹ்மான், தன்னுடைய ஸ்டூடியாவை இளையராஜாவுக்கு சுற்றிக் காண்பித்துள்ளார். அது மட்டுமில்லாமல், இளையராஜாவுடன் அவர் சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்திருந்தார். அதில், “மேஸ்ட்ரோவை எங்களின் Firdaus ஸ்டூடியோவிற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்களின் Firdaus Orchestra வுக்காகவும் வேண்டி, வருங்காலத்தில் அவர் ஏதாவது இசையமைப்பார் என நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Such a pleasure welcoming the Maestro @ilaiyaraaja to our Firdaus Studio… Hope he composes something amazing for our @FirdausOrch to play in the future! pic.twitter.com/oam4TJPL63
— A.R.Rahman (@arrahman) March 6, 2022
இசையுலகில் இரண்டு பெரிய கலைஞர்கள், துபாயில் சந்தித்துக் கொண்ட சம்பவம், ஒட்டு மொத்த இசை ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை அளித்துள்ளது. பலர் இதனை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தும் வந்தனர்.
‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு பிறகு, இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரை ஒன்றாகப் பார்த்ததால், இது தொடர்பான புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தங்களுக்காக வேண்டி பாடல் ஒன்றை இசையமைக்க வேண்டும் என்ற ஏ.ஆர். ரஹ்மானின் விருப்பத்திற்கு இளையராஜா என்ன பதில் சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
request accepted.. will start composing soon. @arrahman@FirdausOrch #Mercuri https://t.co/oYxghate53
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 7, 2022
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டினை பகிர்ந்த இளையராஜா, “கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. விரைவில் இசை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்” என பதில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இளையராஜாவின் பதில் இன்னும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான நாளை எதிர்நோக்கியும் அனைவரும் காத்து வருகின்றனர்.