மாரி செல்வராஜ் – உதயநிதி – வடிவேலு – ஃபகத் பாசில், கூட்டணி படத்தின் வேற லெவல் டைட்டில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் புதிய பட டைட்டில்!

Mari Selvaraj, Udhayanidhi Stalin, Fahadh Faasil, Keerthy Suresh, Vadivelu, A. R. Rahuman, Maamannan 04-Mar-2022: இயக்குனர் ராமின் உதவியாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட மாரி செல்வராஜ், இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த “பரியேறும் பெருமாள்” படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்தது. இதையடுத்து அவர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்ணன் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.

கர்ணன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த இயக்குனர் மாரி செல்வராஜின் புதுமனைப் புகுவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதே போல சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு நடிகர் பஹத் பாசிலோடு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மேலும் நேற்று உதயநிதி ஸ்டாலின் தனனுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாளை மிகப்பெரிய அறிவிப்பு’ என பதிவிட்டிருந்தார். இதனால் இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்போ, போஸ்டரோ அல்லது வேறு ஏதேனும் அப்டேட்டோ வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பஹத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் படத்துக்கு ’மாமன்னன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மாரி செல்வராஜ் படத்துக்கு முதல்முறையாக ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாமன்னன் படத்தின் போஸ்டர் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றது.