இசையமைப்பாளர் யுவன் பகிர்ந்த சீக்ரெட்.. தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்!

விஜய் செய்த விஷயத்தால் நெகிழ்ந்த யுவன்!

Vijay, Thalapathy, Thalapathy 66, Jason Sanjay, Yuvan Shankar Raja, Beast 01-Mar-2022: இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரையுலகில் அறிமுகமாகி, நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டு காலத்தில், எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

யுவன் இசைக்கு மட்டுமின்றி அவர் குரலுக்கும் எங்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தான் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிய நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் யுவன்ஷங்கர் ராஜா பங்கேற்றிருந்தார்.

அந்த வேளை, தன்னுடைய இசை பயணத்தில் தான் கடந்து வந்த பல நினைவான தருணங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமில்லாமல், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பாடல்களையும் பாடியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய யுவன்ஷங்கர் ராஜா, ‘இந்த இசை பயணத்தில் என்னுடன் பயணித்து துணை நின்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்னுடன் பணியாற்றிய இசை தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றிகள். இந்த நேரத்தில் என் அம்மாவை மிஸ் செய்கிறேன். ஆனால், அந்த இடத்தை என் மனைவியும், மகளும் சரியாக பூர்த்தி செய்துள்ளனர். 25 ஆண்டுகள் ஆகி விட்டது என என் அப்பாவிடம் சொன்ன போது, அவர் “ஓ, அப்படியா” என கேட்டார்’ என யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலையும் யுவன் மேடையில் பகிர்ந்து கொண்டார். ‘ஒரு நாள் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் ஜெகதீஷ் ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். அதில் விஜய்யின் மகன் “யுவனிசம்” என்ற டி சர்ட் ஒன்றை அணிந்திருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எப்படி ரியாக்ட் செய்வது என்றும் தெரியவில்லை.

பின்பு ஒரு நாள் நடிகர் விஜய்யை சந்தித்த போது, ஜெகதீஷிடம் அந்த புகைப்படத்தை நான் தான் உங்களுக்கு அனுப்ப சொன்னேன் என என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய மகன், என்னுடைய தீவிர ரசிகர் என்பதை நான் அறிய வேண்டும் என்பதற்காக தான் அவர் அப்படி செய்துள்ளார். மிகவும் பெர்சனலாக உணர்ந்ததால் அதனை நான் வெளியே பகிரவில்லை’ என யுவன்ஷங்கர் ராஜா பகிர்ந்துள்ளார்.

மேலும் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் அதனை இயக்கவுள்ளதாகவும் யுவன் குறிப்பிட்டார். அதே போல, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை மிஸ் செய்து வருகிறேன் என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் யுவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.