வலிமை வலிமையா? – திரை விமர்சனம்

வலிமை எப்படி?

Ajith Kumar, H Vinoth, Huma, Huma Qureshi, Kartikeya Gummakonda,Valimai 25-Feb-2022 : அஜீத் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களைத் தண்டித்து விட்டு, அவர்களின்  குடும்பத்திற்கு உதவிசெய்யும் பெரிய மனம் கொண்டவர்.  இந்த நேரத்தில் சென்னையில் குற்றங்கள் பெருக ஆரம்பிக்கின்றன. வழிப் பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள், கொலைகள் பெருகத்  தொடங்கின்றன. இக் குற்றங்களைத் தடுக்கும் பணி அஜீத்துக்கு  கொடுக்கப் படுகிறது. எல்லாக் குற்றங்களையும் செய்வது ஒரே குழு எனக் கண்டுபிடிக்கிறார் அஜீத். புலனாய்வு முக்கிய கட்டத்தை நெருங்கும்போது பாரிய திருப்பம். அஜீத்தின் குடும்பம் சிக்கலில் சிக்குகிறது. அஜீத் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. பைக்குகள் மூலம் நடக்கும் விஷயங்களை முதல் காட்சியிலேயே வேறு லெவலில்  காட்சிப்படுத்தி அசரவைத்திருக்கிறார் இயக்குனர். பின்பு , இக் குற்றங்களைத் தடுக்க அஜீத் காவல்துறை அதிகாரியாக வருகிறார் என்றதும், படம் இன்னும் சூடுபிடிக்கிறது. விறுவிறுப்பான பைக் சேஸிங் காட்சிகள், அனல் பறக்கும் ஆக்ஷன் என பரபரப்பாக உள்ளது திரைக்கதை. இடைவேளையை அண்மிக்கும் போது ஒரு திருப்பம். இடைவேளைக்குப் பின்  சண்டைக் காட்சிகள் இருந்தாலும், படம் தன் விறுவிறுப்பை இழந்துவிடுகிறது. சுவற்றில் கோடுகளை வரைந்து போதைப் பொருள் கடத்தும் வில்லன் க்ளைமாக்ஸில் பல பழைய  படங்களில் வந்தது போல ஹீரோவின் குடும்பத்தையே கட்டித் தொங்கவிட்டு, கொல்லப்போவதாக மிரட்டுகிறார். கதாநாயகன் தக்க தருணத்தில் வந்து காப்பாற்றுகிறார்.

படத்தில் வில்லனின் செயல்பாடுகளையும் காவல்துறையின் புலனாய்வையும் நவீனமாகக் காட்டியுள்ளார் இயக்குனர். ஆனால், ஒரு கட்டத்திற்குமேல் இந்தக் காட்சிகள் நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. காவல்துறைக்குள் நடப்பதாக காட்டப்படும் சம்பவங்களும் குற்றங்களை விசாரிக்கும் விதமும் மிக மேம்போக்காக அமைந்திருக்கின்றன. ஒரு காட்சியில், குற்றவாளிகளை கதாநாயகன் சிறையிலிருந்து எங்கோ அழைத்துச் செல்லும்போது வில்லனின் ஆட்கள் ஏகப்பட்ட பைக்குகளில் வந்து மீட்டுச் செல்கிறார்கள். இதனால் அவரை துணை ஆணையர் பதவியிலிருந்து இறக்கம் செய்து ஆய்வாளராக மாற்றிவிடுகிறார்கள். ஆனால், வில்லன் கதாநாயகனை விடுவதாக இல்லை. காவல்துறையிடமுள்ள ஒரு டன் போதைப் பொருளை  மீட்டுத்தந்தால்தான் நாயகனின் குடும்பத்தை விடுதலைசெய்வேன் என மிரட்டுகிறான். இதற்குப் பிறகு கதாநாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நம்மை ஓரளவு மிரள வைக்கின்றன.

Valimai Movie Review

இதுமட்டுமல்ல, இரண்டாம் பாதி, முதல் பாதி படத்தை ரசித்த அளவுக்கு இல்லை. படத்தில் அடிக்கடி பைக் சேஸிங்களும் சண்டைக்காட்சிகளும்தான். அவற்றை இணைக்க ஒரு மெல்லிய, பழைய கதை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அஜீத் எப்போதும் போலவே அட்டகாசமாகவே இருக்கிறார். ஒரு சில சென்டிமென்ட் காட்சிகளை தவிர்த்து , அஜீத் ரசிகர்களுக்கு அவர் வரும் காட்சிகள் மாஸ் தான். ஆனால், இந்தப் படத்திலும் எதிரிகள் குறித்து சுட்டிக்காட்டுகிறார் அஜீத். யார்தான் அந்த எதிரிகள்? கதாநாயகியாக ஹிமா குரேஷி. நடிப்பதற்கு காட்சிகள்  குறைவு. எனினும் தான் வரும் காட்சிகளை சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக வரும் கார்த்திகேயாவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல தமிழ் அறிமுகம். படத்தில் சண்டைக் காட்சிகளும் சேஸிங் காட்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உறுதுணையாக இருக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. யுவனின் “நாங்க வேற மாரி” பாடல் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள் அஜீத் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கின்றன. வலிமை வஜ்ஜிரமே.

நடிகர்கள் : அஜீத் குமார், ஹிமா குரேஷி, கார்த்திகேயா

இசை : யுவன் ஷங்கர் ராஜா(பாடல்கள்), ஜிப்ரான் (பின்னணி இசை)

ஒளிப்பதிவு : நீரவ் ஷா

 இயக்கம் : எச். வினோத்.