ஜெய்யின் வீரபாண்டியபுரம்
Jai, Suseenthiran, Veerapandiyapuram 18th Feb 2022 : வீரபாண்டியபுரத்திலுள்ள சிவா என்கிற ஜெய் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோயின் மீனாட்சியைக் காதலிக்கிறார். இவர்கள் இவர்களின் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்ய ஆயத்தமாகிறார்கள். இறுதியில் தாலிகட்டும் நேரத்தில் ஹீரோ ஜெய் மனம் மாறுகிறார். பின்னர் ஜெய் ஹீரோயின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சம்மதம் கேட்கின்றார். இதனிடையே சரத் குடும்பத்திற்கும் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் நெடுங்காலப் பகை இருந்து வருகிறது. இவ்விரண்டு குடும்பத்துக்குமிடையேயான பகை என்ன? இதற்குள் ஜெய் எப்படி சேர்ந்து கொள்கிறார் ? அவரின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

சிவா பாத்திரத்தில் ஜெய் சாதுவான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் ரசிகர்களை மிரள வைக்கிறார். வீரபாண்டியபுரத்தில் ஜெய்யின் தாடியுடனான தோற்றம் சுப்ரமணியபுர ஜெய்யை நினைவு படுத்துகிறது. ஹீரோயின் வரும் மீனாட்சி கோவிந்தராஜ் மற்றும் அகன்ஷா சிங் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாலசரவணன் சில நகைச்சுவைக் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஜெயபிரகாஷ், ஹரீஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு திரைபடத்திற்கு வலுச் சேர்த்து இருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுசீந்திரன் இப்படத்தை சற்று ஏமாற்றுவதாகவே தோன்றுகிறது. விறுவிறுப்பு குறைந்த திரைக்கதை படத்திற்கு சற்று பின்னடைவை கொடுத்திருக்கிறது. இப்படத்தின் அறிமுக இசையமைப்பாளராக களமிறங்கிய ஜெய்யின் பாடல்கள் நடுத்தரமே. அஜிஸின் பின்னணி இசை குறிப்பிடும் படியாகவுள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களின் இயற்கை அழகை சிறப்பாகவே காண்பித்திருக்கிறார்.