கங்கை அமரனும் இசைஞானியும் மீண்டும் இணைந்தனர்

பாவலர் பிரதர்ஸ் ரீயூனியன்

Gangai Amaran, Ilayaraja, Composer, Reunion 17th Feb 2022 : இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் அண்ணளவாக ஐம்பது வருடங்கள் இசை அமைத்து வருகிறார். என்றென்றும் இசை ரசிகர்கள் இவருக்கு அடிமையே . இவரது சகோதரர் கங்கை அமரன் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். இவர்கள் இருவரின் வெற்றிக் கூட்டணிக்கு ரசிகர்கள் பட்டாளமே இருந்திருக்கிறது.

இளையராஜாவின் இசையில் பல பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுதியியுள்ளார். கங்கை அமரன் இயக்கிய படங்களில் கோயில் மணி ஓசை, அத்தை மகள் ரத்தினமே படங்களுக்கு அவரே இசை அமைத்திருந்தார். அவை தவிர ஏனைய அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாவே இசை அமைத்திருந்தார்
கங்கை அமரனின் எங்க ஊரு பாட்டுக்காரன்,செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், சின்னவர், கோயில் காளை, தெம்மாங்கு பாட்டுக்காரன் போன்ற பல படங்கள் இன்றளவும் ரசிகர்கள் பேசும் படமாக இருக்கிறது.

குறிப்பாக இவர்கள் கூட்டணியில் உருவான செந்தூரப்பூவே , பூவரசம் பூ பூத்தாச்சு, எதோ நினைவுகள், என் இனிய பொன் நிலாவே, பூங்கதவே தாழ் திறவாய், காற்றில் எந்தன் கீதம், மண்ணில் இந்த, உறவுகள் தொடர்கதை பாடல்கள் அனைவரையும் இன்றும் முணுமுணுக்க வைத்துக்கொண்டிருக்கிறது.இதனிடையே இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து தயாரித்த படம் ‘பெரியசாமி சின்னசாமி’. அப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். பின்பு இருவரும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கங்கை அமரன், “இன்று நடந்த சந்திப்பு… இறை அருளுக்கு நன்றி… உறவுகள் தொடர்கதை” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு பாவலர் பிரதர்ஸ் ரீயூனியன் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். பிரேம்ஜி அமரனும் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.