மாதவன் இயக்கி நடிக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ராக்கெட்ரி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

R. Madhavan, Rocketry, Rocketry The Nambi Effect 14-Feb-2022: நடிகர் ஆர்.மாதவன் நடித்து இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி- தி-நம்பி எஃபெக்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஆர்.மாதவன் முதல் முறையாக இயக்குனராக களமிறங்கியுள்ள “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற ஜூலை 1ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் மாதவன் அறிவித்துள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்படுகிறது. மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், அவரே இப்படத்தை தயாரித்து, எழுதி, இயக்கியும் உள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.