விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி
Kadaisi Vivasayi, Nallandi, Vijay Sethupathi, Yogi Babu 12-Feb-2022 : மரமொன்றை தெய்வமாக வழிபடும் சிறிய கிராமம். அக் கிராமத்திலுள்ள விவசாயி நல்லாண்டி. தன் நிலத்தில் விவசாயம் செய்கிறார். அவர் நிலத்தை அபகரிக்க சிலர் பணத்தை தருவதாக ஆசை காட்டுகிறார்கள். ஆனால் நல்லாண்டி அதற்கு சம்மதிக்காமல் விவசாயம் செய்வதாகவே இருக்கிறார். நிலத்தை அபகரிக்க முயற்சிப்போர் மயில்களை கொல்வதன் மூலம் நல்லாண்டியை சிக்க வைக்கிறார்கள். இவ்விடயம் நீதிமன்றுக்கு செல்கிறது. மாயாண்டி கைதுசெய்யப்படுகிறார். இறுதியில் அவர் விடுதலை ஆனாரா ? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நல்லாண்டி யதார்தமாகவே நடித்து இருக்கிறார். அவருக்கு தெரியாமல் சில காட்சிகள் படம் பிடித்தது போல் தோன்றுகிறது. அவருடைய வசனங்களும், காட்சிகளும் இயல்பாக உள்ளன. யோகி பாபு தவிர பிரபல நகைச்சுவை நடிகர்கள் இல்லாமலே காட்சிகள் அரங்கை அதிரவைக்கின்றன. நீதிமன்றில் வெள்ளந்தியாக அவர் பேசுவது எல்லோரையும் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இயலாத அரை மனநோயாளியாக நெஞ்சை அள்ளுகிறார். அவருடைய முடிவு எதிர்பாராதது. யானைப்பாகனாக வரும் யோகி பாபு, மற்றும் ரெபேக்கா ஆகிய இருவரும் தங்கள் கதாபாத்திரங்கள் பற்றி பேசவைக்கிறார்கள். . மணிகண்டன் ஒளிப்பதிவு அழகாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை வழமை போல் காட்சிக்கு பொருத்தமாக ஒலிக்கிறது.
நீண்ட காலமாக பயிர்கள் இரசாயனமாகியிருப்பதை வெளிப்படுத்தி யிருக்கிறார் மணிகண்டன். படம் முழுவதும் ஒரு கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார் மணிகண்டன். இந்த கதைக்களத்தில் கிராமத்தின் நாடி நரம்புகளையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். மரபணு மாற்றம் பெற்ற விதைகள் எவ்வாறு எம்முடன் சேர்ந்துள்ளது என்பதையும், ரசாயன உரங்களின் பாதிப்புக்கள் எவ்வாறு என்பதையும் தத்துரூபமாக சொல்லியிருக்கிறார்.
விவசாயி இன்னும் உயிருடனே உள்ளார்.