விஷ்ணு விஷாலின் FIR
Vishnu Vishal, FIR Movie, Reba Monica John, Manjima Mohan 11-Feb-2022 : விஷ்ணு விஷால் கெமிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். இவர் முஸ்லீம் என்றதால் வேலை கிடைக்காமல் போராடுகிறார். பின்பு தனியார் கம்பெனியில் இணைந்து கொள்கிறார். ஒரு நாள் விஷ்ணு விஷாலின் போன் விமான நிலையத்தில் தவறிப் போகிறது. அந்த நேரம் தீவிரவாதி அபு பக்கரரை தேசிய புலனாய்வு நிறுவனம் தேடுகிறது. தொலைந்த விஷ்ணு விஷாலின் போன் மூலம் விமான நிலையம் அருகே குண்டு ஒன்று வெடிக்கிறது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிக்கு பதிலாக விஷ்ணு விஷால் கைதாகிறார். போலீஸ்ஸில் இருந்து விஷ்ணு விஷால் தப்பித்தாரா? தீவிரவாதி அபு கண்டுபிடிக்கப்பட்டாரா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஷ்ணு விஷால் இஸ்லாமியராக நேர்த்தியாக நடித்து இருக்கிறார். செண்டிமெண்ட், ஆக்ஷன் என நடிப்பில் பிரகாசித்துள்ளார். கௌதம் மேனன் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள். வக்கீலாக வரும் மஞ்சிமா மோகன் தனது பணியை நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆக்ஷன் திரில்லர் படமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த். கதாபாத்திரங்களை திறமையாக பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்திய முஸ்லிம் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்பதைச் சொல்லியுள்ளார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை திரைக்கதையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர். அருள் வின்செண்ட்டின் ஒளிப்பதிவும் குறிப்பிட படும் படியாக உள்ளது. அஸ்வத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
FIR விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு அத்தியாயம்.