விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் மகான்
Chiyaan Vikram, Mahaan, Bobby Simha 10-Feb-2022 : காந்தியத்தை கடுமையாக பின்பற்றி வரும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் விக்ரம். சிறுவயதிலேயே மது ஒழிப்பு, அகிம்சை போன்ற காந்தியக் கொள்கைகளை தந்தையால் பழக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார். எந்தவித ஆசையையும் இல்லாமல் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் விக்ரம். இவருக்கும் காந்தியக் கொள்கையுடைய சிம்ரனுக்கும் திருமணம் நடந்து குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் இவர்கள் வெளியூருக்கு செல்லும் போது, விக்ரம் தனது வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ நினைக்கிறார். இந்நிலையில், சிறு வயது தோழனான பாபி சிம்ஹா மற்றும் அவர் மகன் சனந்த் இருவரையும் சந்திக்க நேரிடுகிறது. அத்துடன் விக்ரமின் வாழ்க்கை முற்றிலுமாக திசை மாறுகிறது.
பின்பு இருவரும் சேர்ந்து மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறுவிடுகிறார்கள். விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாதா என்னும் போலீஸ் அதிகாரியாக துருவ் விக்ரம் வடிவில் சிக்கல் எழுகிறது. அந்த போலீஸ் அதிகாரியை எப்படி சமாளிக்கிறார்கள்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
வழக்கம்போல் வித்தியாசமாகவே நடித்திருக்கிறார் விக்ரம். காலத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிபடுத்தும் விதம் படத்திற்கு சிறப்பாக இருக்கிறது. விக்ரமிற்கு ஏற்றாற்போல் துருவ் விக்ரமின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. சில காட்சிகளில் ரசிகர்களை நடிப்பின் மூலம் அசத்துகிறார். பாபி சிம்ஹாவின் நடிப்பும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டமாக உள்ளன. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. மகான் மகானே.
