வீரமே வாகை சூடும் திரை விமர்சனம்

விஷாலின் வீரமே வாகை சூடும்

Veeramae Vaagai Soodum, Vishal 04/02/2022 : ஹீரோ விஷால் போலீஸ் எஸ்.ஐ பதவிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். இவரின் அப்பா மாரிமுத்து போலீஸ் ஏட்டாக வேலை செய்கிறார். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார். ரவீனாவை ஊரில் இருக்கும் பிரபல ரவுடி பாபு ராஜ்ஜின் தம்பி காதலிக்கிறார். ஆனால், ரவீனா அந்தக் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடையும் ரவுடியின் தம்பி ரவீனாவை மிரட்டி காதலை சொல்ல வைக்கிறார். இது விஷாலுக்கும், ரவுடிக்கும் தெரிந்து தம்பியை அசிங்க படுத்துகிறார்கள்.

இதனால், ரவீனாவை கடத்த முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராத முகமாக இன்னொரு கும்பல் ரவீனாவை கடத்தி விடுகிறார்கள். இறுதியில் தங்கை ரவீனாவை விஷால் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? ரவீனாவை கடத்தியோர் யார்? ஏன் கடத்தினார்கள்? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஹீரோ விஷால் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். சாதாரண மனிதனின் கோபம்,தங்கை பாசம், சமுதாயத்தின் மீதான அக்கறை என நடிப்பில் பிரகாசிக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வழமை போலவே தூள் கிளப்புகிறார்.ஹீரோயின் டிம்பிள் ஹயாதி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து உள்ளார். தங்கை ரவீனா நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார். மலையாள வில்லன் பாபு ராஜ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் நடித்துள்ளார். மாரி முத்துவும் அனுபவ நடிப்பை காட்டியிருக்கிறார். யோகி பாபு காமெடியில் இடையிடையே சிரிக்க வைத்திருக்கிறார்.

Veeramae Vaagai Soodum Movie Review

சாதாரண மனிதனின் கோபத்தை கருவாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் து.ப.சரவணன். வெவ்வேறு திசையில் நகரும் மூன்று துணைக் கதைகளை ஒன்றாக சேர்த்து திரைக்கதை உருவாக்கியுள்ளார். வழமையான கமர்ஷியல் படத்திற்கேயான விடயங்களை வைத்தே திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு வலுச்சேர்க்கிறது. இடைவேளையின் பின் எதிர்பாக்கும் படியான காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு சற்று குறையாகவுள்ளது . கவின் ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பக்க பலமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் தனது பெயரை பொறித்துள்ளார்.