அண்ணாத்த படம் எனக்கு மிகப்பெரிய சவால் – பிரபல நடிகர் – Annaatthe

Annaatthe : கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அங்கு பேசிய பாலா “தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். ” என தெரிவித்துள்ள பாலா சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படம் குறித்து சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

அதில் “இதுவரை 50க்கும் மேலான படங்களை ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தப் படத்திற்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறேன். மேலும் நான் ஒரு ரஜினி ரசிகன், அருகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். என்ன ஒரு மனிதர் அவருக்குள் கலைஞன் பிறவியிலேயே இருக்கிறார்.

அமைதியாக அமர்ந்திருக்கிறாரே என நினைத்தால் கடந்து செல்கையிலேயே நம்மைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லி விளையாட்டுத் தனமாக குறும்பு செய்துவிட்டு செல்வார். காமெடி உணர்வு அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் தொடர்ந்து தன் திறமையால் மக்களை மகிழ்விக்கட்டும். ஒரு ரசிகனாக அதையே நான் விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

annatha bala